தமிழ்நாடு

தடையை மீறி போராட்டம் நடத்தியதாக ஆயிரக்கணக்கான அதிமுகவினர் மீது வழக்கு

kaleelrahman

தடையை மீறி போராட்டம் நடத்திய அதிமுகவைச் சேர்ந்த 2500 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் நேற்று போராட்டம் நடந்தது. அதேபோல் சென்னையிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் போராட்டம் நடந்தது.

இந்நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, முன்னாள் எம்எல்ஏ விருகை ரவி, அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, ராஜேஷ் உள்பட 2,500 பேர் மீது வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 143- சட்டவிரோதமாக கூடுதல், 188- அரசு அதிகாரியின் உத்தரவை மதிக்காமல் இருத்தல், 269- உயிருக்கு ஆபத்தான தொற்று நோய் பரப்பக்கூடிய கவனக் குறைவான செயலில் ஈடுபடுதல், 290- பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்தல், மற்றும் அனுமதி இல்லாமல் பேனர் வைத்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.