தமிழ்நாடு

பழவேற்காடு ஏரி: தடையை மீறி படகு சவாரி சென்று குளித்த இளைஞர்கள் - நீரில் மூழ்கி 2 பேர் பலி!

webteam

பழவேற்காடு ஏரியில் தடை செய்யப்பட்ட படகு சவாரியில் சென்று, ஏரியில் குளித்த சென்னை திரிசூலத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில் கடந்த 2011-ஆம் ஆண்டு படகு கவிழ்ந்து, 22 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து படகு சவாரிக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையான நேற்று சென்னை திரிசூலத்தை சேர்ந்த 10 பேர் பழவேற்காடுக்கு வந்து தடை செய்யப்பட்ட படகு சவாரிக்கு சென்றுள்ளனர். அங்கு முகத்துவாரம் அருகே ஏரியில் குளித்தபோது மதன் குமார், அருண் குமார், எபிநேசர் ஆகிய 3 பேர் நீரில் மூழ்கினர்.

அப்போது பழவேற்காடு ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள், நீரில் மூழ்கியவர்களை தேடிய போது இரு இளைஞர்கள் மீட்கப்பட்டனர். அதில் மதன் குமார் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். எபிநேசர் என்ற இளைஞருக்கு பழவேற்காடு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனிடையே நீரில் மூழ்கி காணாமல் போன அருண்குமாரை பொன்னேரி தீயிணைப்பு துறையினர் பழவேற்காடு ஏரியில் 4 மணி நேரம் தேடினர். இந்நிலையில், அருண் குமாரின் சடலம் முகத்துவாரம் அருகே கண்டெடுக்கப்பட்டது. சடலத்தை மீட்ட திருப்பாலைவனம் காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட பகுதியில் படகு சவாரியில் சென்று நீரில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.