சென்னையில் ரவுடிகளுக்கிடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் குண்டடிப்பட்டு பத்து நாட்கள் கழித்து ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அட்மிட்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலங்களில் முதல் முறையாக இரு தரப்பு ரவுடி கேங்குகளுக்கு இடையே எண்ணூரில் மோதல் ஏற்பட்டது. அப்போது ரவுடிகள் நாட்டுத் துப்பாக்கியை வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தி சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் ஒருவர் குண்டடிப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த ஜூன் 8 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கிட்டதட்ட 10 நாட்கள் கழித்து குண்டடிபட்டவர் சென்னை ஸ்டேன்லி மருத்துவமனையில் அட்மிட்டாகியுள்ளார்.
இதையடுத்து அவரது வயிற்றில் இருந்த குண்டை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அப்புறப்படுத்தினர். மேலும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரின் பெயர் ‘சுடுசோறு செந்தில்’ என்பது தெரியவந்தது. இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட அலெக்ஸாண்டர் மற்றும் பி.டி. ரமேஷ் ஆகியோரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் எண்ணூரை சேர்ந்தவர்கள் எனவும் ரமேஷ்தான் செந்தில்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார் எனவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் ரமேஷ் போலீசாரிடம் சொல்லக்கூடாது என செந்திலை மிரட்டியுள்ளதாகவும் தெரிவித்தனர்.