தமிழ்நாடு

சென்னை : செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கடலில் கலக்கும் நீரை சேமிக்க புதிய முயற்சி.!

webteam

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கடலில் கலக்கும் நீரை சேமிக்க புதிய முயற்சியை சென்னை குடி நீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அடையார் வழியாக வீணாக கடலில் கலக்கும் நீரை சேமிக்கும் விதமாக சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் குடிநீரை தேக்கி வைக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 400 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி ஆகும். செம்பரம்பாக்கம் ஏரி முழுவதும் நிரம்பும்போது உபரி நீர் அடையாறு ஆற்றில் திறக்கப்பட்டு வீணாக கடலில் கலந்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது கல்குவாரி குட்டை நீர் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்தும், ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாகவும் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

மேலும் சிக்கராயபுரம் கல்குவாரியில் 2017ஆம் ஆண்டு முதல் மழைக்காலங்களில் தேங்கும் நீரை, குடிநீர் தேவைக்காக அவ்வப்போது பயன்படுத்தி வரும் நிலை உள்ளது.

இந்நிலையில் செம்பரம்பாக்கத்தில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் நேரடியாக சிக்கராயபுரம் கல்குவாரிக்கு கால்வாய் மற்றும் குழாய்கள் மூலம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் பாதையில் இருந்து கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதன்மூலம் 0.4 டிஎம்சி தண்ணீரை சேகரித்து வைக்க முடியும். அதாவது சென்னை நகருக்கு தேவையான குடிநீரை எட்டு நாட்கள் தொடர்ச்சியாக சிக்கி ராயபுரம் மண் குவாரி மூலம் வழங்க முடியும்.

செம்பரம்பாக்கத்தில் உற்பத்தியாகும் அடையாறு திருமுடிவாக்கம் திருநீர்மலை அனகாபுத்தூர் வழியாக சென்னை நகருக்குள் பயணிக்கிறது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 3 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சிக்கராயபுரம் கல்குவாரிக்கு உபரி நீரானது மடைமாற்றம் செய்வதன் மூலம் அடையாறு கடலில் கலப்பதை கணிசமாக குறைக்க முடியும் என சென்னை குடிநீர் வழங்கல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக காவனூர் அருகே செம்பரம்பாக்கம் உபரிநீர் செல்லும் பாதையின் குறுக்கே 40 மீட்டர் அகலத்தில் சிறிய தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டு செயல்படுத்த பட உள்ளது.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/nWWf0Ql2V0U" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>