தமிழ்நாடு

சென்னை: அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் செய்துகொண்ட போலந்து நாட்டு பெண்!

webteam

இந்திய குடும்ப உறவு முறைகளையும் கலாச்சாரத்தையும் அதிகம் விரும்பும் வெளிநாட்டு பெண்கள் பலர், அவர்களது திருமணங்களை இந்திய கலாச்சார முறைப்படி செய்துகொள்ளும் நிகழ்வு அதிகமாக நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் போலந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தமிழ் கலாச்சாரத்தின் மேல் கொண்ட விருப்பத்தால் தமிழ் கலாச்சாரத்தின் படி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, தாலி கட்டி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

சென்னை அயனாவரத்தை சேர்ந்த வித்யநாத்-ஜோதிலஷ்மி தம்பதியின் மகன் மோத்திகிருஷ்ணன் போலாந்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் போலந்து நாட்டை சேர்ந்த அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் மார்த்தா அன்ன ரோசல்ஸ்காவுக்கும் மோத்தி கிருஷ்ணனுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவு செய்தனர்.

போலந்தை சேர்ந்த மணப்பெண் மார்த்தா அன்ன ரோசல்ஸ்கா, வெளிநாட்டில் பிறந்து அங்குள்ள கலாசாரத்தில் வளர்ந்து இருந்தாலும் தமிழ் கலாச்சாரத்தை அதிகம் விரும்பியுள்ளார். இந்நிலையில் மணப்பெண் மார்த்தாவின் ஆசைப்படியே தமிழ் கலாச்சாரத்தின் படி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, தாலி கட்டி, உறவினர்களின் ஆசிர்வாதத்துடன் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில வெகு விமர்சையாக இருவரின் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமண விழாவில் மணமகள் வீட்டை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் திருமணம் குறித்து பேசிய மணமகன் மோத்தி கிருஷ்ணன் தாயார், வாழையடி வாழையாக மணமக்கள் வாழ வேண்டும் என விரும்பி தமிழர் கலாச்சாரத்தில் திருமணம் செய்து வைத்ததாக தெரிவித்தார்.