தமிழ்நாடு

விவசாயி எடுத்த விபரீத முடிவு - நிதி நிறுவனம் டிராக்டரை பறிமுதல் செய்ததே காரணம் எனப் புகார்

kaleelrahman

செஞ்சி அருகே தனியார் நிதி நிறுவனத்தில் வங்கிய கடனை திரும்ப கட்டாததால் விவசாய அசிங்கப்படுத்தி டிராக்டரை பறிமுதல் செய்ததால் விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. விவசாயியான இவர், ஸ்ரீராம் பைனான்ஸ் மூலம் கடன் பெற்று டிராக்டர் வாங்கியுள்ளார். போதிய வருமானம் இல்லாததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார்.

இந்நிலையில், சின்னதுரை நிலத்தில் உழவு செய்து கொண்டிருந்தார். அப்போது நிதி நிறுவனத்தில் இருந்து வந்த இரண்டுபேர் விவசாயி சின்னதுரையை அசிங்கமாக திட்டியதோடு பணம் கட்டாததால் உங்களுடைய டிராக்டரை பறிமுதல் செய்கின்றோம் என்று பறிமுதல் செய்துள்ளதாகவும், இதனால் மனமுடைந்த விவசாயி சின்னதுரை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது.



இதேபோல் தொடர்ந்து செஞ்சி பகுதியில் தனியார் வங்கிகள் விவசாயிகளிடம் மரியாதை குறைவாக நடந்து வருவதாகக் கூறி விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்கும் வரை தாங்கள் சாலைமறியல் செய்வோம் என அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் ஒருமணி நேரமாக செஞ்சி - சேத்பட் சாலையில் வாகனங்கள் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு எந்த ஒரு அதிகாரியும் வரவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.