தமிழ்நாடு

செங்கல்பட்டு: அரசு மருத்துவமனை லிப்டில் மாட்டிக் கொண்ட பெண் ஊழியர் மீட்பு

webteam

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் லிப்டில் மாட்டிக்கொண்ட ஒப்பந்த பெண் ஊழியரை, சக ஊழியர்கள் மயக்க நிலையில் மீட்டனர்.

செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தனியார் ஒப்பந்த ஊழியர்கள் துப்புரவு மற்றும் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு ஒப்பந்த துப்புரவு ஊழியரான செங்கல்பட்டு அருகே உள்ள உதயம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜானகி என்பவர் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள 3-வது மாடியில் இருந்து பணிமுடிந்து லிப்ட் வழியாக இறங்கியுள்ளார்.

அப்போது லிப்ட் பாதியிலேயே பழுதாகி நின்றுள்ளது. இதனால் சுமார் அரைமணி நேரமாக அவர் லிப்ட்டுக்குள்ளேயே சிக்கி தவித்துள்ளார். இச்சம்பவம் அறிந்த சக ஊழியர்கள் நீண்ட நேரம் போராடி லிப்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த ஜானகியை மயங்கிய நிலையில் மீட்டனர்.

இதனையடுத்து மருத்துவமனையிலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரத்தில் வீடு திரும்பினார். ஏற்கனவே 3 லிப்டுகளில் 2 லிப்டுகள் வேலை செய்யாத நிலையில் மூன்றாவது லிப்டும் தற்போது வேலை செய்யாத நிலையில் உள்ளது. இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள லிப்டுகளை முறையாக பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.