School
School pt desk
தமிழ்நாடு

செங்கல்பட்டு: ”புகார் கொடுத்த எங்களையே மிரட்டுறாங்க”- சிறுவனின் கண்ணில் காயம்பட்ட விவகாரத்தில் பெற்றோர் வேதனை!

webteam

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்தியானந்தம். இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இதில், மூத்த மகன் சுதாகர் (10) வீட்டின் அருகே உள்ள சிதண்டி மண்டபம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

பள்ளியில் என்னதான் நடந்தது? (கூறப்படும் தகவல்)

பிப்ரவரி மாதம் பள்ளிக்குச் சென்ற சுதாகர், காலை நேர பாடவேளையில், ஆசிரியயை பாடம் நடத்தியுள்ளார். அப்போது கரும்பலகையில் குறிப்புகளை எழுதிய ஆசிரியயை இவற்றை மாணவர்கள் எழுதிக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார். அப்போது சுதாகருடன் கல்வி பயிலும் மற்றொரு மாணவன், தன்னிடம் பேனா இல்லாததால், அருகில் இருந்த சுதாகரிடம் எழுதுவதற்கு பேனா கேட்டுள்ளார்.

ஆனால், தன்னிடம் வேறொரு பேனா இல்லாததால், அவர், பேனா தர மறுத்துள்ளார். அப்போது, ஆசிரியை, பலகையில் எழுதி போட்ட குறிப்புகளை எழுதாதது குறித்து மோனிஷை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமுற்ற மோனிஷ், முக்கோண வடிவிலான ஸ்கேலை எடுத்து சுதாகர் மேல் வீசியுள்ளார். இதில், சுதாகரின் வலது கண் கருவிழியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வலியால் அழுத சுதாகரை, முகம் கழுவி வரச் சொல்லிய ஆசிரியை, தலைமை ஆசிரியர் அறையில் படுக்க வைத்துள்ளனர். பின்பு, மாலை பள்ளி முடிந்தவுடன், வேறொரு சக மாணவன் சுதாகரின், கைய பிடித்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதற்கு முன்பாகவே, காயமடைந்த சுதாகரிடம், உங்களுடைய வீட்டில் நடந்ததைக் கூற வேண்டாம் என ஆசிரியை கூறியதால், பயமுற்ற மாணவன், பெற்றோரிடம் கூறாமல் வீட்டில் படுத்துள்ளார்.

அன்றிரவு 10 மணிக்கு மேல் வலி தாங்காமல் மாணவன் அழுதுள்ளார். இதையடுதது பெற்றோர் அவனிடம் கேட்டதால், பள்ளியில் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இந்நிலையில், விடியற் காலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளனர். மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், கண் கருவிழியில் பலமாக அடிபட்டதால், மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சென்னை மருத்துவமனையில் சுதாகர் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், சுதாகருக்கு பலமாக கண் விழியில் பாதிக்கப்பட்டதால், கண் பார்வை 90 சதவீதம் இழக்க நேரிடும் என கூறியுள்ளனர். இதனால் மாணவனின் பெற்றோர் மனம் உளைச்சலுக்கு ஆளாகினர்.

மிரட்டுகிறார்கள், நெருக்கடி கொடுக்கிறார்கள் - பெற்றோர் புகார்

இது தொடர்பாக சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரில், “அரசு ஆரம்பப் பள்ளி சங்க நிர்வாகிகள் எங்கள் வீட்டிற்குச் வந்து ’உங்களுக்கு நிவாரணம் பெற்று தருகிறோம்; நீங்கள் ஆசிரியர் மீது புகார் தெரிவித்தால் அவருக்கு வேலை போய்விடும் என்று மிரட்டும் வகையில் கட்டப்பஞ்சயத்து செய்தனர். அப்பள்ளியில் பணிபுரியும் சத்துணவு ஆசிரியை பிரேமா தொடர்ந்து தங்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

ஊராட்சி மன்ற தலைவர் சின்னப் பையன் என்பவரும் தொடர்ந்து எங்களை அச்சுறுத்தி வருகிறார். இது சம்பந்தமாக படாளம் காவல் நிலையத்தில் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஆசிரியை மார்க்ரேட் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தோம். இதுவரை புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் எங்களை மிரட்டும் பாணியில் பேசுகின்றனர். ஊராட்சி மன்ற தலைவர் சொன்னால் மட்டுமே புகாரின் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என படாளம் காவல்துறை ஆய்வாளர் சத்தியவாணி கூறிவிட்டார்“ தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அரவிந்தன் அவரிடம் கேட்டதற்கு ஆசிரியர் மீது துரை ரீதியாக விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.