தீபாவளியையொட்டி தொடர்ச்சியாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் சென்னை முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. தெருக்கள், சாலையெங்கும் குப்பை மேடாய் காட்சியளிக்கின்றன.
சென்னையில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியதையடுத்து சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் உள்பட அனைவரும் ஆசை தீர பட்டாசுகளை கொளுத்தி தள்ளினர். வானவேடிக்கையால் வானமே வண்ணமயமாக மாறினாலும், புகைமூட்டம் மக்களை அவதியுறச் செய்தது. சென்னை மாநகர் முழுவதுமே புகை மூட்டத்தால் சூழப்பட்டது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர், செளாகார்பேட்டை, புரசைவாக்கம், பெரம்பூர், மணலி, வேளச்சேரி, அடையாறு, திருவல்லிக்கேணி, மைலாப்பூர், மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் புகைமூட்டம் காணப்பட்டதால் சாலைகளி்ல் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. எதிரே வரும் வாகனங்கள் கூட எதுவென்று தெரியாத அளவிற்கு புகைமூட்டம் காணப்பட்டது. அதுமட்டுமல்லாது சென்னை முழுவதும் வெடித்து சிதறிய பட்டாசு காகிதங்களால் சென்னையே குப்பை மேடாகியுள்ளது.
காற்றில் கந்தகம் அதிகம் கலந்ததால், புகை மாசு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கே.கே.நகர் பகுதியில் உள்ள ஈஎஸ்ஐ உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ள முதியவர்களும், குழந்தைகளும் மூச்சு திணறலுக்கு ஆளாகினர்.