தமிழ்நாடு

தொடர் கனமழை... செம்பரம்பாக்கம் ஏரியின் நிலை என்ன? விளக்கமளித்த சென்னை மாநகராட்சி

Sinekadhara

செம்பரம்பாக்கம் ஏரிக்கு பிரதானமாக பூண்டி ஏரியிலிருந்து நீர் வரும். தற்போது நீர்மட்டம் உயர்ந்ததை அடுத்து, பூண்டி ஏரியின் வரும் நீர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், 24 அடி உயரம்கொண்ட ஏரியில் தற்போது நீர்மட்டம் 21 அடிக்குமேல் உயர்ந்துள்ளது.

இன்றுமுதல் கனமழை பெய்தால் ஏரியின் நீர்மட்டம் விரைவாக உயர வாய்ப்புகள் அதிகம். இதுகுறித்து, செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு மேற்கொண்டுள்ளதாகவும், ஆனால் ஏரி தற்போது நிரம்ப வாய்ப்பில்லை என்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்துவரும் பட்சத்தில் ஏரி நிரம்ப வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு உயரும் பட்சத்தில் உடனடியாக நீரை வெளியேற்ற தாங்கள் தயாராக உள்ளதாகவும், நீர் வெளியேற்றப்படும் வழிகளில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி பிரகாஷ் கூறுகையில், செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடியாக உள்ளநிலையில், தற்போது நீர்மட்டம் 21.6ஆக பதிவாகியுள்ளது. தலைமை செயலர், பொதுப்பணி துறை செயலர் மற்றும் சுகாதாரத் துறை செயலர் அனைவரும் கலந்து பேசியுள்ளோம். வெள்ளப்பெருக்கு காலங்களில் சமாளிப்பதற்கும், மக்களின் குடிநீர் தேவைகளையும் கருத்தில்கொண்டு, நீர்மட்டம் 22 அடியை தொட்டவுடன், குறைவான அளவில் நீரை திறந்துவிட கலந்தாலோசித்துள்ளோம்.

இதுகுறித்து பொதுப்பணி துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் பேசிவிட்டு தகுந்த முடிவை எடுப்பதாக பொதுப்பணித் துறை செயலர் கூறியுள்ளார். அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதால், ஏரிக்கரையோரம் வசிக்கும் மக்கள் அச்சப்பட தேவையில்லை’’ என்று கூறியுள்ளார்.