தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் வெளியேற்றம் அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

webteam

பாதுகாப்பு கருதி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து கடந்த 10 நாட்களாக 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், மாலை 3:00 மணிக்கு மேல் ஆயிரம் கன அடியாக நீரை வெளியேற்ற காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்ட உயரம் 20.15 அடியும், நீர் வரத்து 1510 கன அடியும், நீர் வெளியேற்றம் 500 கன அடியாகவும், மொத்த கொள்ளளவு 2641 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

இதைத் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பது அதிகரிக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 21 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் மழையின் அளவு அதிகரித்ததால் 3 மணி அளவில் ஆயிரம் கன அடி நீர் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளார். செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்துர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதலம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வானப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.