தமிழ்நாடு

மதுரையில் தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனம் அனுமதியுடன் இயங்குகிறதா? நீதிமன்றம் கேள்வி

ஜா. ஜாக்சன் சிங்

மதுரையில் உள்ள ஒரு தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனம் உரிய அனுமதியுடன் செயல்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யுமாறு உணவுப் பாதுகாப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த சேதுராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "மதுரை மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் ஞானேஸ்வரி, பாலமுருகன் தம்பதியினர் கடந்த 5 வருடமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை நிலையம் நடத்தி வருகின்றனர். இதற்காக 2 போர்வெல் அமைத்து குடிநீர் எடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு லாரிகள், கேன்கள் மூலமாக திருமண மண்டபம் உட்பட சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையம் பெரியார் கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளதால் இங்கு சுத்திகரிக்கப்பட்டு வீணாகும் கழிவுநீரை பெரியார் கால்வாயில் கலந்து வருகிறது. இதனால் கிராமப்புற மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மாசுப்படுகிறது. மேலும் கிராமத்தின் நிலத்தடி நீரும் பாதிக்கபடுகிறது. தொடர்ச்சியாக சட்டத்திற்குப் புறம்பாக அனுமதி இன்றி அவர்கள் தண்ணீர் எடுத்து வருகிறனர். எனவே இதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் அவர் கூறியிருந்தார்

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சம்பந்தப்பட்ட தண்ணீர் சுத்திகரிப்பு விற்பனை நிறுவனம் உரிய அனுமதியுடன் செயல்படுகிறதா? உரிய ஆவணங்கள் உள்ளதா? என உணவுப் பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்" என உத்தரவிட்டனர்.