கன்னியாகுமரி மாவட்டத்தில் அங்கன்வாடி பணிக்காக நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகள் வெளியிட்டதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி தேர்வு எழுதியவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த அங்கன்வாடி ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான தேர்வில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று தேர்வு எழுதியிருந்தனர். இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து தேர்வெழுதியவர்கள் திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் குலசேகரம் - மார்த்தாண்டம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி போராட்டத்தை கைவிட வைத்தனர். மேலும் இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.