தமிழ்நாடு

வழக்கமான உற்சாகத்துடன் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் நடைபெற்ற சதுர்த்தி விழா

kaleelrahman

முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகளுடன் உற்சாகமாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழா. சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலையிலுள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். முகாமிலுள்ள வளர்ப்பு யானைகள் அங்கு உள்ள விநாயகர் கோயிலில் மணியடித்து பூஜை செய்வதை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் விநாயகர் சதுர்த்தியன்று முதுமலையில் கூடுவார்கள்.

இந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. முன்னதாக வளர்ப்பு யானைகள் அனைத்தும் பூக்கள் கொண்டு அலங்கரிக்கபட்டு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

முகாமிலுள்ள வளர்ப்பு யானைகளான மசினி மற்றும் கிருஷ்ணா, முகாம் உள்ளே அமைந்துள்ள விநாயகர் கோவில் முன்பு மணி அடித்தும், கோவிலைச் சுற்றி வந்தும் பூஜை செய்ததை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியோடு கண்டு ரசித்தனர்.