செய்தியாளர்: அச்சுதராஜகோபால்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவிற்கு உட்பட்ட கோவில்பாளையம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது அய்யனார் கோயில். இக்கோவிலின் திருத்தேர் திருவிழா நடைபெற்றது.
இந்நிலையில்., இந்த ஆண்டும் மூன்று தேர்கள் கிராமத்தில் உள்ள தேர் நிலைநிறுத்தப்படும் இடமான பெருமாள் கோயில் முன்பாக வண்ண மலர்களினால் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து இந்த தேரை வடமிழுக்க வருகை தந்த அமைச்சர் சிவசங்கர் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் தேரை வடம்பிடித்து இழுத்தார். அப்போது அய்யனார் தேரை வடமிழுக்கும்போது, தேர் அச்சு முறிந்து கருப்புசாமி தேர்மீது சாய்ந்தது. இதையடுத்து ஜேசிபி வாகனத்தை கொண்டு மூன்று மணிநேர போராட்டத்திற்குப் பிறகு அச்சு முறிந்த தேரில் இருந்த அய்யனார் செல்லியம்மன் மாரியம்மன் உள்ளிட்ட உற்சவ மூர்த்தி சிலைகளை மற்றொரு சகடை தேருக்கு மாற்றினர். அதில் வண்ணமலர்களால் அலங்கரித்து சுவாமியை பக்தர்கள் வடமிழுத்து வழிபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட அறநிலையத் துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, மரத்தால் ஆன அச்சுடன் கூடிய இத்தேரை முழுபாரத்தை தாங்கும் சக்தி இல்லையெனவும் இதில் உள்ள சக்கரங்கள் மிகவும் பழமையானது எனவும் ஆய்வு செய்து எச்சரித்த நிலையிலும் தேரை இழுத்ததால் தேரின் அச்சு முறிந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்