கலாஷேத்ரா
கலாஷேத்ரா கோப்புப்படம்
தமிழ்நாடு

கலாஷேத்ரா கல்லூரிக்கு எதிராக 250 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்!

Jayashree A

சென்னை பெசன்ட் நகர் கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு, பேராசிரியர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுப்பதாக கடந்த மார்ச் மாதம் அங்குள்ள மாணவிகள் குற்றஞ்சாட்டினர். புகாருக்கு ஆளான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவ - மாணவிகள் சார்பில் உள்ளிருப்பு போராட்டமும் நடத்தப்பட்டது.

கலாஷேத்ரா

இதற்கிடையே இப்புகார் தொடர்பாக, மாணவிகள் ஏழு பேர் வழக்கு தொடுத்தனர். அதில் “சென்னை உயர் நீதிமன்றத்தால் விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவில் அதன் இயக்குநர் ரேவதி ராமசந்திரன் இடம் பெறக்கூடாது. மாணவிகளின் பிரதிநிதிகள், பெற்றோர்களின் பிரதிநிதிகள் மட்டும் இடம் பெறும் வகையில் மாற்றியமைக்க வேண்டும்” என்று அவர்கள் கோரியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், “கலாஷேத்ரா அறக்கட்டளை நடத்தும் கல்வி நிறுவனங்களில், பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம், பல்கலைக்கழக மானிய குழு சட்டம் உள்ளிட்ட சட்ட விதிகளின் அடிப்படையில் பாலியல் தொல்லைகள் தடுக்க விரிவான கொள்கை வகுக்க வேண்டும்.

கொள்கை வகுத்த பின் பாலியல் தொல்லை புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்படும் உள் விசாரணை குழுவில், மாணவிகள் மற்றும் பெற்றோரின் பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.

கலாஷேத்ரா

இந்நிலையில் சைதாப்பேட்டை 9 வது நீதிமன்றத்தில் 250 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு எதிராக இன்று தாக்கல் செய்துள்ளது காவல்துறை. முன்னதாக இவ்விவகாரத்தில் 50க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் காவல்துறை சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.