தமிழ்நாடு

சூனியம் எடுக்கப் போய் சிலையால் சிக்கிய சாமியார்! தகரமா? தங்கமா?

webteam

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சூனியம் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி வீட்டில் தோண்டியபோது நடராஜர் சிலை, விளக்கு உள்ளிட்ட பொருள்கள் மீட்கப்பட்டன. 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகில் உள்ள பூதனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் ரமேஷ். கூலி தொழிலாளியான இவருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்ததால், தங்கள் குடும்பத்திற்கு ஆகாதவர்கள் செய்வினை செய்து விட்டார்கள் என குழப்பத்தில் இருந்துள்ளார். சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து ரமேஷ் தம்பி தமிழரசன் இந்த விஷயத்தை கேட்டறிந்துள்ளார். 

தமிழரசனுக்கு சென்னையில் சீனிவாசன் என்ற சாமியாருடன் பழக்கம் இருந்துள்ளது. அவரிடம் சென்ற தமிழரன், தனது அண்ணன் வீட்டில் யாரோ செய்வினை செய்து வைத்துள்ளனர். அதை எடுக்க வேண்டும் எனக் கூறி, அந்த சாமியாரை போச்சம்பள்ளி அருகில் உள்ள தன் அண்ணன் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் அழைத்து வந்துள்ளார். பின்பு ரமேஷ் வீட்டில் நள்ளிரவில் ஆடு, எலும்மிச்சம் பழம், உள்ளிட்ட பூஜை பொருட்களை வைத்து பூஜைகள் செய்யப்பட்டு, ஆடு பலியிடப்பட்டுள்ளது. அத்துடன் எலுமிச்சம் பழத்தை நான்காக வெட்டி சிகப்பு பூசி அந்த சாமியுள்ளார் வீசியுள்ளார். இவற்றுடன் சில சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டன.

இதனை தொடர்ந்து இனி உன் வீட்டில் எவ்வித கெடுதலும் நடக்காது என சாமியார் கூறியுள்ளார். தன் வீட்டில் நடந்த பூஜைகள் குறித்தும், அந்த சாமியார் குறித்தும் ரமேஷின் குடும்பத்தார் அதே பகுதியைச் சேர்ந்த ராஜம்மாள் என்பவரிடம் கூறியுள்ளனர். ராஜம்மாள் தன் வீட்டிலும் யாரோ செய்வினை செய்து உள்ளதாக கூறி, அந்த சாமியரை அழைத்துள்ளார். நள்ளிரவில் ராஜம்மாள் வீட்டிற்கு வந்த சாமியார், கோழியை பலியிட்டு அதே எலுமிச்சம் பழப் பூஜையை நடத்தியுள்ளார். பின்னர் சூனியம் எடுப்பதாக வீட்டின் ஒரு முளையில் தோண்டியுள்ளார். அப்போது அங்கு நடராஜர் சிலை உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. அதை மூட்டை கட்டி வேறு ஒரு வீட்டில் சாமியார் வீசியதாக கூறப்படுகிறது. பின்னர் இனி ‘உனக்கு எதும் ஆகாது, இனி பயப்பட தேவையில்லை’ என ராஜம்மாளிடம் சாமியார் கூறியுள்ளார். 

சாமியாரும், தமிழரசனும் சென்னை சென்று விட்டனர். இதுகுறித்து ரகசிய தகவல் கிடைத்ததால் போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் மனோகரன், தாசில்தார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ரமேஷிடம் விசாரணை நடத்தினர். அப்போது சென்னையில் உள்ள தனது தம்பியிடம் போனில் தொடர்பு கொண்ட ரமேஷ் கேட்டபோது, ராஜம்மாள் வீட்டில் தகரத்தால் செய்யப்பட்ட நடராஜ் சிலை மற்றும் காமாட்சி விளக்கு, பித்தளை பொருட்கள் கிடைத்ததாக கூறியுள்ளார். அவற்றை மூட்டை கட்டி ஒரு வீட்டின் மீது வீசி விட்டு வந்தாகவும் தெரிவித்துள்ளார். 

அவர் கூறியதை வைத்து அந்த மூட்டையை கண்டுபிடித்த போலீஸார், ரமேஷிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜம்மாள் வீட்டில் குழி தோண்டும் போது அதில் விலை மதிக்கதக்க சிலைகள் இருந்திருக்கலாம் எனவும், அந்த சிலைகளுக்கு பதில் இந்த தகர சிலைகளை சாமியார் வீசி விட்டு சென்றிருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்த தகவல் பரவியதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் சென்னையில் உள்ள சாமியார் சீனிவாசனிடம் போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர். அதில் உண்மை வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.