தமிழ்நாடு

திட்டமிட்டபடி பணியை தொடரும் சந்திரயான்-2 ஆர்பிட்டர் - இஸ்ரோ விளக்கம்

rajakannan

சந்திரயான் - 2 திட்டத்தில் விண்ணில் ஏவப்பட்ட ஆர்பிட்டர் திட்டமிட்டபடி பணியை தொடர்வதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரோ தன்னுடைய இணைய பக்கத்தில் சிலர் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில், “ஆர்பிட்டரில் உள்ள அனைத்து தொழில்நுட்ப கருவிகளும் செயல்படுகிறது. ஆர்பிட்டர் தொழில்நுட்பத்தின் தொடக்க பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஆர்பிட்டரின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. 

சிறப்பாக செயல்பட்டு வரும் ஆர்பிட்டர் மூலம் நிலவு குறித்த ஆய்வு தொடரும். விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு இழந்தது எப்படி என தேசிய நிபுணர்கள் குழு மற்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்” என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கான கெடு நாளை முடியும் நிலையில், இஸ்ரோ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

முன்னதாக, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் இஸ்ரோ அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது. இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.