தமிழ்நாடு

தென்மாவட்டங்களின் சில இடங்களில் திடீரென இரவில் கொட்டித் தீர்த்த கனமழை!

webteam

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மாவட்டங்களில் திடீரென இரவில் கனமழை கொட்டித் தீர்த்தது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, “தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நேற்று  சில இடங்களில் கனமழை பெய்தது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சுற்றுவட்டாரங்களில் வெயில் சுட்டெரித்ததால், பகல் நேரங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் இருந்தது. இந்தநிலையில், குருவிக்கரம்பை, பூக்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் திடீரென ஒரு மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்ததால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

(கோப்பு புகைப்படம்)

கன்னியாகுமரி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையோர பகுதிகளான தக்கலை, அழகியமண்டபம், மேக்காமண்டபம், குலசேரகம் உள்ளிட்ட இடங்களில், இடியுடன் கூடிய திடீர் கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால், கோடை வெயிலின் தாக்கம் குறைந்து, இதமான சூழல் நிலவியது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. முதுகுளத்தூர், தூரி, வெண்ணீர்வாய்க்கால், சாக்குளம், காஞ்சிங்குளம், எட்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இரவு 9 மணியளவில் மிதமான மழை பெய்தது. இதேபோல், புதுக்கோட்டையின் நகர பகுதிகள் மற்றும் மாவட்டத்தில் சில இடங்களில் திடீரென மழை பெய்ததால், குளிர்ந்த சூழல் நிலவியது.