தமிழ்நாடு

தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

Veeramani

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், நீலகிரி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவுவதோடு, ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா, தெற்கு அந்தமான் கடல், தென் மேற்கு அரபிக்கடல், மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.