தமிழ்நாடு

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை

kaleelrahman

குமரிக்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்துள்ளது. அதனால் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், புதுகோட்டை, நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார். 


மேலும், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் கூறினார். அதேபோல சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார்.

குமரிக்கடல், மாலத்தீவு, லட்சத்தீவு, கேரள கடற்பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.