தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல மதுரை இடைப்பட்டியில் 7செ.மீ மழையும், காரியாபட்டியில் 6செ.மீ மழையும், விரகனூர், மானாமதுரை, மற்றும் பேரையூரில் 5செ.மீ மழையும் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.