தமிழ்நாடு

அரபிக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

JustinDurai

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழகம், டெல்டா மற்றும் காரைக்கால், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், வேலூர், கடலூரின் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

15ஆம் தேதி லட்சத்தீவு, மாலத்தீவு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும், என்றும் அது புயலாக வலுப்பெற வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், கேரளா, கர்நாடகாவில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் தென்மேற்கு திசையிலிருந்து தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2லிருந்து 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.