தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருக்கிறது. எனவே புதுவை மற்றும் காரைக்காலில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இதேபோல் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழக கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
வடகிழக்கு பருவமழையானது அக் 1 முதல் நவம்பர் 10 வரை 26 செமீ அளவு வரை பெய்திருக்க வேண்டும். ஆனால் இந்த காலத்தில் 24 செமீ மழை தான் தமிழகத்தில் பதிவாகியிருக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 5செமீ, மைலாடியில் 4செமீ, அம்பாசமுத்திரம் 3 செமீ மழை பதிவாகியுள்ளது" என தெரிவித்துள்ளார்.