வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் காணப்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை, தென்மேற்கு வங்கக் கடல் நோக்கி நகர்ந்துள்ளது. இதனால் அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
இந்த நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. வேளச்சேரி, போரூர், உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு இரவில் மழை பெய்தது. பொன்னேரியில் இரவு முழுவதும் கன மழை பெய்தது. பழவேற்காடு, எண்ணூர், திருவொற்றியூர், ஆரம்பாக்கம் பகுதிகளில் பலத்த மழை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.
ஏற்கெனவே கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டையில் நேற்றும் மழை பெய்தது. இந்நிலையில் மழை காரணமாக புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கணேஷ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதேபோல நாகை மாவட்டத்தில் நிவாரண முகாம்களாக உள்ள பள்ளிகளுக்கும், சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தின் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.