தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளில் சிசேரியன் மூலம் குழந்தை பெறுபவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. தொடரும் சிசேரியன் பிரசவங்கள், இதுதொடர்பான ஆக்கபூர்வ விவாதத்தை எழுப்ப வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியிருக்கின்றன.
அரசு மருத்துவமனைகளில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் ஐந்து பெண்களில் இரண்டு பேர் சிசேரியன் மூலம் குழந்தை பெறுகிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் இரண்டில் ஒருவருக்கு சிசேரியன் செய்யப்படுகிறது என்கிறது ஒரு ஆய்வறிக்கை. கடந்த பத்தாண்டுகளாகவே நார்மல் டெலிவரியை விட சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தெலங்கானாவுக்கு அடுத்தபடியாக அதிக சிசேரியன் நடக்கும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது.
நாள், நட்சத்திரம் அடிப்படையில் குழந்தை பெற்றுக் கொள்ள அறுவை சிகிச்சைக்கு முன்பதிவு செய்யும் வழக்கம் பலரிடம் இருப்பதும் இதுபோன்ற சிசேரியன்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். இது தவிர சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற காரணிகளும் சிசேரியன்கள் அதிகரிக்க காரணங்களாக அமைகின்றன. இதனைத் தவிர, இக்கட்டான சூழ்நிலையில் தாய், சேயின் இறப்பைத் தவிர்க்கவும் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்கின்றனர்.
வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றத்தால், கருவுறுவதற்கே பல லட்சங்கள் செலவு செய்து ஐவிஎஃப் சிகிச்சை மேற்கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில், சிசேரியன் எண்ணிக்கையும் அதிகரிப்பது அதன் நீட்சி என்றே சொல்லலாம்.