உள்ளூர் மொழி திரைப்படங்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் என ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார், வரும் 14-ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்படும் என்றார்.
கேன்கள், பாக்கெட்டுகளில் விற்கப்படும் குடிநீருக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், உள்ளூர் மொழி திரைப்படங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், மசாலாப்பொடி மற்றும் பீடி ஆகியவை மீதான வரியை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
பிராந்திய மொழிப் படங்கள் மீது, ஜிஎஸ்டி வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டே விலகுவேன் என நடிகர் கமல்ஹாசன் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுகுறித்து தமிழக அரசும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளது.