தமிழ்நாடு

கூடுதலாக பல்வேறு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி

கூடுதலாக பல்வேறு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி

rajakannan

தமிழகத்தில் ஏற்கனவே ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் புதிதாக ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி, மீத்தேன், ஷேல் ஆயில், ஷேல் கேஸ் உள்ளிட்ட பூமிக்கு அடியில் உள்ள எந்தவித‌மான வளத்தையும் எடுத்துக் கொள்ள‌, திறந்தவெ‌ளி அனுமதி முறையை கடைபிடித்து மத்திய அரசு அனுமதி அளித்து வருகிறது. ஒற்றை அனுமதி என்பது ஒரே அனுமதியைப் பெற்றுக் கொண்டு, பூமிக்கடியில் இருக்கும் வளம் எதுவாக இருந்தாலும் ஹைட்ரோகார்பன் என்ற பொதுப் பெயரி‌ல் எடுத்துக் கொள்ளலாம். இந்த வகையில்‌, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு, திறந்தவெளி அனுமதி முறையில் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சுற்று அனுமதி அளித்தது மத்திய அரசு. அதில் வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாடு முழுவதும் ஹைட்ரோகார்பன் எடுக்க 2 மற்றும் மூன்றாம் சுற்று அனுமதியை வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இரண்டாம் சுற்று அனுமதியில் நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 14 வட்டாரங்களிலும், மூன்றாம் சுற்று அனுமதி‌‌யில் 18 வட்டாரங்களிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க திறந்தவெளி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதில் இரண்டாம் சுற்‌‌றில், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் காவிரி படுகையில் 474.19 சதுர கிலோ மீட்டர் பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி பெற்றுள்ளது இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம். அனுமதி பெற்றிருக்கும் இந்தப் பரப்பு, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள திருக்காராவாசல் தொடங்கி, வேளாங்கண்ணி, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், கரியாப்பட்டி என ஒரு பிரம்மாண்டமான சதுர வடிவிலானது ஆகும். இப்பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி பெற்றிருப்பதைத் தொடர்ந்து, நாகை மாவட்டம் திருப்பூண்டி, கரியாப்பட்டினம், கரும்பம்புலம், திருவாரூர் மாவட்டம் மடப்புரம் ஆகிய 4 இடங்களில் ஐஓசி நிறுவம் முதல்கட்டமாக ஆய்வுக்கிணறுகளை அமைக்க உள்ளது.

மூன்றாம் சுற்றில் ‌தமிழகத்தில் நாகை‌, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டத்திலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசி நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. இதில் நாகை மாவட்டத்தில் 4‌59.83 சதுர கிலோ மீட்டர் பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளது. தமிழகத்தில் நாகை மாவட்டம் நல்லநாயகிபுரம், சீர்காழி அருகே உள்ள நெம்மேலி, இவாநல்லூர், சோழசேகரநல்லூர், ஆனந்ததாண்டவபுரம், ‌ பந்தலூர், டி.மணல்மேடு, தில்லையாடி, சேஷமூலை ஆகிய இடங்கள்,  புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு மற்றும் காரைக்கால் ஆகிய இடங்கள் என 11 இடங்களில் ஆய்வுக்கிணறு‌கள் அமைக்க உள்ளது ஓஎன்ஜிசி நிறுவனம்.

மேலும், திறந்தவெளி அனுமதி முறையில் மூன்றாம் சுற்றில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயிரத்து 403.41 சதுர கிலோ மீட்டர் பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. அம்மாவட்டத்தில் ஆர். எஸ்‌. மங்களம் அருகே உள்ள கருங்குடி, தேவிபட்டினம் அருகே பெருவயல், பெருங்கலூர், ராமநாதபுரம் அருகே பலன்குளம் உள்ளிட்ட 5 இடங்களில் ஆய்வுக்கிணறு‌கள் அமைக்கப்பட உள்ளன.