மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.எம். கட்டோச் நியமிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மதுரை திருப்பரகுன்றம் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் ரூபாய் 1264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. கொரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக கட்டிட வேலைகள் தொடர்பான பணிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மே மாதம் சுற்றுசுவர் மற்றும் சாலைகள் அமைப்பதற்கான வேலைகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.எம். கட்டோச் நியமிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே போல கிண்டி டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவமனை துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷயன் மற்றும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை புற்றுநோய் அறுவைசிகிச்சைப் பிரிவு மருத்துவர் சரவணன் சுப்பையா ஆகியோர் உறுப்பினர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் மருத்துவமனை எந்த நாடாளுமன்ற உறுப்பினரின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் என்பது தொடர்பான தகவல் வெளியாக வில்லை.