புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். இன்று தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.
மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையிலான மத்திய குழுவினர் புயல் பாதிப்பு குறித்து சென்னையில் நேற்று முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினர். அப்போது பேசிய மத்திய குழுவினர், கஜா புயல் பாதிப்புகள் குறித்து வரும் 27/ம் தேதிக்குப் பிறகு ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுமெனக் கூறினர்.
அதன் பின்னர் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்திற்குச் சென்ற மத்தியக்குழுவினர், முதலில் குளத்தூர் பகுதியில் சேதமடைந்த வீடுகளை ஆய்வு செய்தனர். திருச்சி-புதுக்கோட்டை சாலையில் மின் கம்ப சீரமைப்புப் பணிகளை பார்வையிட்டனர். புதுக்கோட்டை காஞ்சிநகர் பகுதியில் சேதமடைந்த வீடுகளை ஆய்வு செய்து மக்களிடம் குறைகளைக் கேட்டனர். அங்கிருக்கும் அதிகாரிகளிடமும் விவரங்களைக் கேட்டறிந்தனர். அதைத்தொடர்ந்து வடகாடு, மாங்காடு ஆகிய பகுதிகளில் சேதமடைந்த தென்னை, வாழை ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் போது இருள் சூழ்ந்திருந்தது.
ஆய்வின் போது மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக எம்.பியுமான தம்பிதுரை, சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வுக்காக திட்டமிடப்பட்டிருந்த செம்பட்டி விடுதி, ஆதனக்கோட்டை உள்ளிட்ட 4 பகுதிகளுக்கு மத்திய குழு செல்லவில்லை. இந்நிலையில் தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு நடத்த உள்ளனர்.