தமிழ்நாடு

ரூ.1.85 லட்சம் லஞ்சம் : மத்திய பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளரை பொறிவைத்து பிடித்த சிபிஐ

webteam

மதுரையில், ஒப்பந்த பணிகளுக்கான தொகையை வழங்குவதற்கு லஞ்சம் கேட்ட மத்திய பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் மற்றும் லஞ்சம் கொடுக்க முயன்ற ஒப்பந்ததாரர் இருவர் என மூவரை சிபிஐ கைது செய்துள்ளது.

மதுரையில் உள்ள மத்திய பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நிர்வாக பொறியாளராக பணியாற்றிவந்த பாஸ்கர் என்பவர் மீது பல்வேறு புகார்கள் சென்றதன் அடிப்படையில் அவருடைய செல்போனுக்கு வரும் அழைப்புகள் அனைத்தையும் சி.பி.ஐ. போலீசார் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் அவரது செல்போன் உரையாடலின் போது மத்திய பொதுப்பணித்துறை ஒப்பந்த பணிகளை எடுத்து நடத்தி வந்த ஒப்பந்ததாரர்களான சிவசங்கர்ராஜா, நாராயணன் ஆகிய இருவர் தங்களுக்கு சேர வேண்டிய பணிக்கான தொகையை உடனடியாக வழங்கும்படி கேட்டதற்கு, தனக்கு 1 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் கேட்டுள்ளார்.

மேலும் தனக்கு தர வேண்டிய லஞ்ச பணத்தினை வீட்டிற்கு வந்து கொடுக்குமாறும் கூறியுள்ளார். இதையடுத்து போனில் பேசியபடி நேற்று முன்தினம் இரவில் மதுரை மீனாம்பாள்புரம் பகுதியில் உள்ள குடியிருப்பில் பாஸ்கரின் வீட்டுக்கு ஒப்பந்ததாரர்களான சிவசங்கர் ராஜா மற்றும் சென்னையை சேர்ந்த நாராயணன் ஆகிய இருவரும் லஞ்சப்பணத்தை கொண்டு வந்துள்ளனர். லஞ்ச பணத்தை வாங்கும்போது அங்கு மறைந்திருந்து கண்காணித்த சி.பி.ஐ. அதிகாரிகள் பொறியாளர் பாஸ்கரன் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சிவசங்கர் ராஜா மற்றும் நாரயணன் ஆகியோரை கைது செய்தனர். மூவரும் மதுரை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி எம்.சிவபிரகாசம் உத்தரவிட்டார்.