தமிழ்நாடு

கடலில் படிந்துள்ளது கச்சா எண்ணெய் அல்ல: பொன்.ராதாகிருஷ்ணன்

கடலில் படிந்துள்ளது கச்சா எண்ணெய் அல்ல: பொன்.ராதாகிருஷ்ணன்

webteam

கடலில் படிந்துள்ளது கச்சா எண்ணெய் அல்ல, கப்பலின் எரிபொருள் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

எண்ணூர் ராம்நகர் குப்பம் கடற்பகுதியில் எண்ணெய் கசிவு அகற்றும் பணிகளை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கப்பல்கள் மோதிய விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இதன்பின் தெரியவரும் தகவல்கள் அடிப்படையில் உரியவர்களிடம் இழப்பீடு பெறப்படும் என்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியது: விபத்து நடந்தவுடன் கடலோர பாதுகாப்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் அந்த பகுதிக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது கப்பலில் இருந்து அதிக அளவில் எண்ணெய் வெளியேறியதாக தெரியவில்லை. விபத்து ஏற்பட்ட போது கப்பல் உடைந்து விடுமோ என்ற அச்சத்தில் அது குறித்த பணிகளில் கவனம் செலுத்தப்பட்டது என்றார்.

கப்பலில் 32,000 டன் எண்ணெய் பொருட்கள் இருந்தது. கப்பல் உடைந்திருந்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும். எனவே அவற்றை தவிர்ப்பதற்கான நடவடிக்கையில் துறைமுகத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். கப்பலை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு செல்லும் பணி முதலில் மேற்கொள்ளப்பட்டது. கப்பலில் இருந்த எண்ணெய் பொருட்கள் முழுவதுமாக இறக்க 2 நாள் ஆகியது.

இந்நிலையில் எண்ணூர் பகுதியில் கடலில் மிதந்த எண்ணெய் பொருட்களை எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடலில் மிதந்து கொண்டிருக்கும் எண்ணெய் பம்ப் மூலம் வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. ரசாயன பொடியை தூவி எண்ணெய் அகற்றும் பணியும் நடைபெற்றது ஆனால் கரைகளில் படிந்துள்ள எண்ணெய்யை மனித சக்தி மூலம் மட்டுமே அகற்ற முடியும் என்பதால் அந்த பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நம்மிடம் இருக்கும் உபகரணங்கள் நல்ல முறையில் உள்ளன. ஆனால் அவைகளைக் கொண்டு கடலில் உள்ள எண்ணெய் கழிவுகளை மட்டுமே அகற்ற முடியும்.

கடல் பரப்பில் மொத்தம் 74 கிலோ மீட்டர் நீளத்துக்கு எண்ணெய்க் கசிவு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. தற்போது அது 12 கிலோ மீட்டராக குறைந்துள்ளது. கடற்கரை ஓரமாக எண்ணெய் கசிவு இருப்பதால் கைகளால் மட்டுமே அதை அகற்ற வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.