சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் கண்ணன் உள்பட தமிழக காவல்துறை அதிகாரிகள் 5 பேருக்கு சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சக சிறப்பு வீரதீர விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் காவல்துறையில் சிறப்பாக புலனாய்வு பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சிறப்பு வீரதீர விருதினை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் தமிழகத்தில் பணிபுரியும் 3 ஐபிஎஸ் அதிகாரிகள், டி.எஸ்.பி, காவல் ஆய்வாளர் என 5 அதிகாரிகளுக்கு இந்த விருது வழங்கப்பட இருக்கிறது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்கம் வெளியிட்டுள்ள உத்தரவில் “2020 ஆம் ஆண்டுக்கான சிறப்பு புலனாய்வு வீர தீர விருதானது சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன், எஸ்.பி அரவிந்த் மற்றும் மகேஷ், டிஎஸ்பி பண்டாரிநாதன், காவல் ஆய்வாளர் தாமோதரன் ஆகியோருக்கு வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் ஆணையர் கண்ணன் தமிழக உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு டிஐஜியாக இருந்தபோது கன்னியாகுமரியில் காவல்துறை எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு மற்றும் தமிழகத்தில் ஊடுருவிய பயங்கரவாத அமைப்பு தொடர்பாக திறமையாக புலனாய்வு மேற்கொண்டவர். எஸ்பிக்கள் அரவிந்த் மற்றும் மகேஷ் ஆகியோரும் சிறப்பாக புலனாய்வு மேற்கொண்டதற்காக இந்த விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரவிந்த் தற்போது திருவண்ணாமலை காவல்துறை எஸ்பியாகவும், மகேஷ் கியூ பிரிவு எஸ்பியாகவும் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் டிஎஸ்பி பத்ரிநாதன் கோவை சிறப்புப்பிரிவிலும், காவல் ஆய்வாளர் தாமோதரன் சென்னை சிறப்புப் பிரிவிலும் பயங்கரவாதிகள் தொடர்பாக திறமையாக பணிகளை மேற்கொண்டதற்காக மத்திய அரசின் உள்துறை அமைச்சக சிறப்பு விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து பேருக்கும் விருதுடன் ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது.