ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக தமிழக அரசு கொண்டு வந்த அவசரச்சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தில் காளைகளை காட்சிப்படுத்தக்கூடாத பட்டியலில் இருந்து நீக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும், கலாசார அமைச்சகமும், சட்ட அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளன. இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் அவசரச் சட்டத்திற்கு அனுமதியளித்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்தது.
தமிழக அரசின் வரைவு சட்டத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மாநில அரசின் வரைவு சட்டத்தில் காளைகள் காட்சிப்படுத்தபடும் விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டவுடன் தமிழக ஆளுநர் வித்யா சாகர் ராவ் அவசரச் சட்டத்தை பிறப்பிப்பார்.
முன்னதாக தமிழக அரசே அவசரச் சட்டத்தை பிறப்பிக்கலாம் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தெரிவித்திருந்தார். ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய மாநில அரசுகள் சட்டம் இயற்றவிருப்பதாக தெரிவித்ததையடுத்து, ஒரு வாரத்திற்கு தீர்ப்பை ஒத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து தமிழக இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டம் வெற்றியடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.