தமிழ்நாடு

நியூட்ரினோவுக்கு அனுமதி !

நியூட்ரினோவுக்கு அனுமதி !

நியூட்ரினோ ஆய்வு திட்டத்திற்கு முழுமையான அனுமதியை மத்திய சுற்று சூழல்துறை அமைச்சகம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினோவை ஆராய்ச்சி செய்வதற்கான ஆய்வகம் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் கடந்த 2011 ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைக்கப்பட இருந்த இந்த ஆய்வகத்துக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கின. 2.5 கி.மீ தூரத்துக்கு சுரங்கம் அமைத்து இந்த ஆய்வகம் அமைக்கப்பட இருந்தது.

இந்த ஆய்வகத்தால் மேற்குத் தொடர்ச்சி மலையில் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் என்பதால், ஆய்வகம் அமைக்கக் கூடாது என்று பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் இத்திட்டத்துக்கு அனுமதி மறுத்தது. எனவே நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதில் சிக்கல் நீடித்தது. அனுமதியைப் பெற பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. 

நியூட்ரினோ திட்டத்திற்கான புதிய அனுமதி கோரி Tata Institute of Fundamental Research நிறுவனம் கடந்த ஜனவரி 5-ம் தேதி மத்திய  சுற்றுச்சூழல் அமைச்சக ஆய்வுக் குழுவிடம் விண்ணப்பித்திருந்தது. அப்போது, பல்வேறு ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு மதிப்பீட்டுக் குழு கூறியது. இந்நிலையில், தேனியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அமைச்சக ஆய்வுக் குழு பரிந்துரைத்துள்ளது. இந்திய நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தை முழுமையாக ஏற்பதாகவும், நியூட்ரினோ திட்டத்தால் கதிர்வீச்சு அபாயம் இருக்காது என்றும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு தெரிவித்துள்ளது. சிறப்பு திட்டமாக செயல்படுத்த சுற்றுச்சூழல் அமைச்சக ஆய்வுக் குழு பரிந்துரை வழங்கியுள்ளது. மேலும், இனி பொதுமக்கள் கருத்துகளை கேட்க வேண்டியதில்லை எனவும் சுற்றுச்சூழல் அமைச்சக ஆய்வுக் குழு கூறியுள்ளது. இதனையடுத்து இன்று நியூட்ரினோ ஆய்வகம் செயல்படுவதற்கான முழுமையான அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு 

ஆட்சேபனை இருப்பின் 30 நாட்களுக்குள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரலாம் என தகவல். நியூட்ரினோ திட்டத்திற்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தினமும் 340 கி.லி. தண்ணீரை பயன்படுத்தலாம் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம், வனத்துறையிடம் அனுமதியை பெற வேண்டும். நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனத்திற்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் நிபந்தனையும் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.