கருணாநிதி, பேனா சின்னம், மத்திய அரசு
கருணாநிதி, பேனா சின்னம், மத்திய அரசு file image
தமிழ்நாடு

கருணாநிதி பேனா நினைவுச் சின்னம்: 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி!

PT WEB

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் ரூ. 81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரம்மாண்ட பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது.

இதற்காக கருணாநிதி நினைவிடத்திற்குப் பின் பகுதியில் பெரிய நுழைவு வாயில் அமைக்கப்பட்டு, அங்கிருந்து கண்ணாடி பாலம் வழியாக மக்கள் கடல்மேல் நடந்துசென்று பேனா நினைவுச் சின்னத்தைப் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

இந்த திட்டத்திற்கு நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில், இந்த நினைவுச் சின்னத்தை அமைக்க அனுமதி கோரி மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ்நாடு அரசு சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.

அந்த விண்ணப்பம் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, கருணாநிதி பேனா நினைவு சின்னத்துக்கு மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

இருப்பினும் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி

* ஐஎன்.எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லாச் சான்று பெற வேண்டும்.

* கட்டுமானப் பணிகளுக்காக எந்தவொரு நிலையிலும் நிலத்தடி நீரைப் பயன்படுத்தக் கூடாது. திட்டத்தைச் செயல்படுத்தும்போது நிபுணர் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.

* அவசரகால மீட்புப் பணி தொடர்பான விரிவான திட்டம் தீட்டப்பட வேண்டும்.

* ஆமை இனப்பெருக்க காலத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது.

* தேசிய கடலோர ஆராய்ச்சி மையம், மண் அரிப்பு, மணல் திரட்சி குறித்து கண்காணிக்க வேண்டும்.

* ஏதேனும், தவறான போலியான தகவல் இருப்பது தெரியவந்தால் அனுமதி வாபஸ் பெறப்படும்

உட்பட மொத்தம் 15 நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கடலோர ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியிருக்கும் 15 நிபந்தனைகள் என்னென்ன என்பது குறித்து அறிய இந்த வீடியோவில் பார்க்கவும்.