மத்திய அரசு அனுமதி அளித்தாலும், மாநில அரசின் அனுமதியின்றி ஹைட்ரோகார்பன் திட்டத்தை துவங்க முடியாது என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சி.வி.சண்முகம், “மத்திய அரசு அனுமதி அளித்தாலும், மாநில அரசின் அனுமதி இல்லாமல் நிலப்பரப்பில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை துவங்க முடியாது. மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் மாண்புமிகு அம்மாவின் அரசும் இந்த விவகாரத்தில் வல்லுனர் குழு அமைத்து சாதக பாதகங்களை ஆராய்ந்து உரிய முடிவு எடுக்கும்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு உயர்நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மாநில அரசின் அனுமதி இல்லாமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை துவங்க முற்பட்டால் அதனை தடுத்து நிறுத்த சட்டத்தில் இடமுள்ளது. மீறினால் கிரிமினல் வழக்கு தொடுக்கவும் மாநில அரசிற்கு உரிமை உள்ளது” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக திமுக சட்டப்பேரவையில் கேள்விகளை எழுப்பியிருந்தது.