கோவை மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்காக தமிழக அரசு அனுப்பிய விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ள நிலையில், பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் தர மறுத்து அவற்றுக்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) மறுப்புக் கடிதத்துடன் திருப்பி அனுப்பியுள்ளது. இந்த ஒப்புதல் மறுப்புக்கு இவ்விரு நகரங்களின் மக்கள்தொகை மற்றும் பொறியியல் சார்ந்த காரணங்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.
கோவை, மதுரை நகரங்களின் மக்கள்தொகை 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 20 லட்சத்துக்கு குறைவாக இருப்பது முதன்மையான காரணமாக கூறப்பட்டுள்ளது. கோவையில் திட்டமிடப்பட்ட பல மெட்ரோ வழித்தடங்கள் 7 முதல் 12 மீட்டர் அகலம்கொண்ட குறுகிய சாலைகளில் உள்ளதால், உயரமான கட்டமைப்புகள் மற்றும் 22 மீட்டர் அகலமான ரயில் நிலையங்களைக் கட்டுவதற்கு அதிக செலவில் இடிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரையின் தற்போதைய பயணத் தேவையை ஆய்வு செய்ததில், அது அதிவிரைவுப் பேருந்துப் போக்குவரத்து அமைப்பு போன்ற குறைந்த செலவிலான திட்டங்களுக்கு மட்டுமே பொருத்தமானது என்றும் மத்திய அரசின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த கடிதத்தை வைத்து கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்று சென்னை மெட்ரொ ரயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும், திருத்தப்பட்ட அறிக்கை புதிய ஆவணங்களுடன் மத்திய அரசு ஒப்புதலுக்காக அனுப்பப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ஆகியோர் மத்திய அரசின் கடிதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ”அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு” என முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து, பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள குருகிராம், ஆக்ரா, புவனேஸ்வர் நகரங்களின் மக்கள்தொகை 20 லட்சத்துக்கு குறைவாக இருந்தபோதும் இந்த நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய பாஜக அரசு ஒப்புதல் அளித்திருப்பதை மதுரை எம்பி சு. வெங்கடேசன் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய அரசின் நிலைப்பாடு கோவை, மதுரை மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள்தொகை தரவுகளை முதன்மையான காரணமாக முன்வைத்து மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மறுப்பு தெரிவித்திருப்பதை சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதையடுத்து, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டதாக தவறான தகவல்களை இண்டியா கூட்டணியினர் பரப்பி வருவதாக விமர்சித்துள்ளார். மேலும், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) தயாரித்து அனுப்பிய விரிவான திட்ட அறிக்கை (DPR) முழுமையாக இல்லாததால் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளதாகவும், இது நிராகரிப்பு அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.