தமிழ்நாடு

`தண்டுக்கீரை இல்லையா?’- மயிலாப்பூர் சாலையோர கடையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

நிவேதா ஜெகராஜா

சென்னை வந்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மயிலாப்பூரிலுள்ள சாலையோர கடையில் காய்கறிகளை வாங்கினார்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள கடைகளுக்கு சென்ற அவர், தமக்குத் தேவையான காய்கறிகளை வாங்கினார். பச்சை சுண்டைக்காய், பிடிகருணை, முளைக்கீரை கட்டு, மணத்தக்காளி கீரை கட்டு ஆகியவற்றை அமைச்சர் வாங்கினார்.

கடைக்காரர்களிடம் தற்போதைய வியாபார நிலவரம் குறித்தும் மத்திய அமைச்சர் கேட்டறிந்தார். வழியில் அவரை சந்தித்த மக்களிடமும் அவர் நலம் விசாரித்தார்.

அப்போது பாஜக எம். எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தண்டு கீரையை நிர்மலா சீதாராமன் கேட்டதாகவும் அது கிடைக்காததால் மற்ற கீரைகளை வாங்கியதாகவும் கூறிய வானதி சீனிவாசன், துப்பாக்கி ஏந்திய காவலர்கள் காரில் இருந்து இறங்கியதைக் கண்ட காய்கறி வியாபாரிகள் முதலில் அஞ்சியதாகவும் அமைச்சரை அடையாளம் கண்டுகொண்ட பிறகு அவருடன் ஆர்வமுடன் உரையாடியதாகவும் அவர் தெரிவித்தார்.