தமிழ்நாடு

முதல்வருடன் ‘கஜா புயல்’ மத்தியக் குழு ஆலோசனை

webteam

கஜா புயல் குறித்து தமிழகத்தில் 3 நாட்கள் ஆய்வு நடத்திய மத்தியக் குழு இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தியது. 

கஜா புயல் சேதங்களுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் கஜா புயல் சேதங்கள் குறித்து ஆய்வு நடத்த மத்தியக் குழுவை அனுப்ப வேண்டும் எனவும் முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார். 

அதன்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்தியக் குழு தமிழகத்தில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்தது. கடந்த 3 நாட்களாக தமிழகத்தின் புயல் பாதித்த இடங்களான தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மத்திய குழுவினர் ஆய்வு நடத்தினர். 

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்தியக் குழுவினர் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடியை சந்தித்து ஆய்வு செய்த பகுதிகள், சேதம் குறித்தும் ஆலோசனை நடத்தினர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டேனியல், கஜா புயலால் வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் அடியோடு சாய்ந்து விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரும் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் புயல் பாதித்த திண்டுக்கல் மாவட்டத்திற்கு செல்ல இயலவில்லை எனவும் குறிப்பிட்டார். 

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தமிழக அரசின் பணிகள் சிறப்பாக உள்ளன எனவும் தெரிவித்தார்.