தமிழ்நாடு

மழை, புயல் பாதிப்புகள் குறித்து மத்தியக்குழு இன்று ஆய்வு

Rasus

வடகிழக்குப் பருவமழை ஏற்படுத்திய பாதிப்புகளையும்,‌ கன்னியாகுமரியில் ஓகி புயலால்‌ நேரிட்ட இழப்புகளையும் ஆய்வு செய்ய‌ மத்தியக் குழு சென்னை வந்துள்ளது. இக்குழுவினர் இன்று முதல் தங்கள் ஆய்வை தொடங்குகிறார்கள்.

நவம்பர் மாதத்தில் கடும் மழையால் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளையும், கடந்த 30 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டிப்போட்ட ஒகி புயலின் பாதிப்புகளையும் ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழகம் ‌வந்துள்ள‌து. மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் சஞ்சீவ் குமார் ஜிந்தால் தலைமையில் இக்குழுவினர் இன்று ஆய்வு செய்கின்றனர். குழுவில் மொத்தமாக 7 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இருபிரிவுகளாக பிரிந்து ஆய்வு செய்ய உள்ளனர்.

மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் செலவீனத்துறை துணை இயக்குநர் முகேஷ் குமார், சுகாதாரம் மற்றும் குடிநீர் அமைச்சக மூத்த ஆலோசகர் எஸ்.சி.சர்மா, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் கண்காணிப்புத்துறை இயக்குநர் நாகா மோகன் ஆகியோர் சென்னையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளனர்.

மத்திய‌ கப்பல்துறை அமைச்சகத்தின் பரமேஸ்வர் பாலி, மின்துறை அமைச்கத்தின் ஓ.பி.சுமன், மத்திய வேளாண்துறையின் மனோகரன், மீன்வளத்துறையின் பால் பாண்டியன்‌ ஆகியோர்‌ கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.‌ இதற்கிடையே ஒகி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைப்பதற்கான உடனடித் தேவைகளை பூர்த்தி செய்ய மத்திய அரசு முதல் கட்டமாக 133 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. ஒகி புயல் பாதிப்பு குறித்து தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி, புயல் நிவாரணமாக 325 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். இதிலிருந்து இடைக்கால நிவாரணமாக தமிழகத்திற்கு 133 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இதைப்போலவே கேரளாவுக்கும் 133 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.