தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு புத்தக வெளியீ'டூ: வாழ்த்துரை வழங்கும் பிரபலங்கள் !

நிவேதா ஜெகராஜா

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு புத்தகம், `உங்களில் ஒருவன் - பாகம் 1’ என்ற பெயரில் வரும் 28ஆம் தேதி பிற்பகல் 3:30 மணிக்கு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நூலாக வெளியாகின்றது. இதற்காக நடைபெறும் நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்துக்கொண்டு அவரே நூலை வெளியிடுகிறார்.

இந்நிகழ்வில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் விழாவில், திமுக பொருளாளர் டி ஆர் பாலு முன்னிலை வகிக்கின்றார். திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி வரவேற்புரையாற்றுகின்றார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்கட்சி தலைவர் தேஜஸ்வீ, கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களைத் தொடர்ந்து நிகழ்வில் ஏற்புரையாற்றுகின்றார் முதலமைச்சர் ஸ்டாலின். இதுகுறித்து வெளியாகியுள்ள அழைப்பிதழில், “எனது 23 வயது வரையிலான வாழ்க்கைதான் இந்த முதல் பாக புத்தகத்தில் உள்ளன. 1953 மார்ச் 1 அன்று நான் பிறந்தேன். 1976 பிப்ரவரி 1 அன்று மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். இதற்கு இடைப்பட்ட ஆண்டுகளில் நடந்த வரலாற்று சுவடுகளை உங்களில் ஒருவன் முதல் பாகமாக எழுதி இருக்கிறேன்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதி உள்ளார்.

முதல்வர் ஸ்டாலினின் இந்த `உங்களில் ஒருவன்’ புத்தகத்தை, பூம்புகார் பதிப்பகம் நூலை வெளியிடுகின்றது.