சமீப காலமாக திருமண நிகழ்வு, பூப்புனித நீராட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பிரமாண்டமாக சீர்வரிசை கொண்டு செல்லுதல் என்பது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அதிலும் குறிப்பாக பூப்புனித நீராட்டு விழாவிற்கு தனது மருமகளுக்கு தாய்மாமன்மார்கள் கொண்டு செல்லும் சீர்வரிசை என்பது சமீபகாலமாக மிகப் பிரமாண்டமாக செய்யப்படும் நிகழ்வுகளாக மாறி வருகின்றன. (பணம் படைத்தவர்கள் செய்கிறார்கள்)
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த சோமசுந்தரவேல் மணிமாலா தம்பதியின் மகள் ஸ்ரீ சிவானி என்பவருக்கு பூ புனித நீராட்டு விழா கதிரேசன் கோவில் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதையொட்டி ஸ்ரீ சிவானியின் தாய்மாமன்மார்கள் லாரியில் 150 க்கு மேற்பட்ட சீர்வரிசை தட்டுகள், நூறு ரூபாய் நோட்டுக்களால் கட்டப்பட்ட நோட் மாலை, தங்க நகை ஆபரணங்கள் ஆகியவற்றை மேளதாளம் முழங்க வானவேடிக்கையுடன் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
மேலும், ஸ்ரீ சிவானியை பல்லக்கில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அடுக்கடுக்கான சீர்வரிசை ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட மாலை தங்க நகை ஆபரணங்கள் என மருமகளுக்கு தாய் மாமன்மார்கள் ஊர்வலமாக சீர்வரிசை கொண்டு சென்ற நிகழ்வு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.