தமிழ்நாடு

கையில் பையுடன் கொள்ளையன் ஓட்டம்.. துரத்திச்சென்ற பொதுமக்கள் -சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு

webteam

நெல்லை மாநகராட்சி விரிவாக்க பகுதிகளில் ஒன்றான மகிழ்ச்சி நகரில் பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து திருடிய கொள்ளையனை, சிறுவர்கள் உள்பட பொதுமக்கள் துரத்திச்சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கையில் பையுடன் தப்பியோடிய கொள்ளையனை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

நெல்லை மாநகரின் விரிவாக்க பகுதியான பாளையங்கோட்டை அடுத்த மகிழ்ச்சி நகரைச் சேர்ந்தவர் ராஜ். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு ராஜ் குடும்பத்துடன் சேலத்தில் உள்ள தங்கள் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று நள்ளிரவு கொள்ளையன் ஒருவன், மகிழ்ச்சி நகரில் உள்ள ராஜ் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளான். வீட்டில் இருந்த பொருட்களைத் திருடி கொண்டிருந்தபோது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ராஜின் வீட்டு முன்பு திரண்டுள்ளனர்.

உடனே சுதாரித்துக் கொண்ட திருடன் கிடைத்த சில பொருட்களை மட்டும் பையில் அள்ளிக்கொண்டு சுவர் ஏறி குதித்து அங்கிருந்து தப்பி ஓடி உள்ளான். இதையடுத்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் பெருமாள்புரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். பின்னர் பொதுமக்கள் தப்பி ஓடிய கொள்ளையனை துரத்திச் சென்றனர். ஆனாலும் கொள்ளையன் பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் கொள்ளையன் தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் கையில் பையுடன் தப்பி ஓடும் கொள்ளையனை சிறுவர்கள் உள்பட பொதுமக்கள் துரத்தி செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

நெல்லை மாநகர பகுதியில் கடந்த சில மாதங்களாகவே தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் மகிழ்ச்சி நகரில் கொள்ளை சம்பவத்தை பொதுமக்கள் கையும் களவுமாக கண்டுபிடித்ததோடு கொள்ளையனை துரத்திச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.