நாளை வாக்குப்பதிவு நடக்கவுள்ள குடியாத்தம் அரசு தொடக்கப்பள்ளியில் இருந்த சிசிடிவி கேமராக்கள், மடிக்கணினிகள் திருடப்பட்டன.
வேலூர் மக்களவைத் தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்ளிட்ட 28 பேர் களத்தில் உள்ளனர்.
இந்தத் தேர்தலில் அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் போட்டியிடவில்லை. கடந்த இரு வாரங்களாக தலைவர்கள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று மாலை 6 மணியுடன் பரப்புரை ஓய்ந்தது.
நாளை வாக்குப்பதிவு என்பதால் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் வாக்குச்சாவடியாக செயல்படும் குடியாத்தம் அரசு தொடக்கப்பள்ளியில் வகுப்பறை பூட்டை உடைத்து சிசிடிவி கேமரா மற்றும் 11 மடிக்கணினிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.