தமிழ்நாடு

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு

Rasus

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க சிபிஎஸ்இ-க்கு  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக இருந்ததால், கருணை மதிப்பெண் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், இந்த பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், மே 6ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வில் தமிழில் மொழிமாற்றம் செய்த வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தது என்றும், இதனால் தமிழ் மொழியில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் +2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது அமர்வு முன்பு நடைபெற்றது. மருத்துவ கவுன்சில் பரிந்துரையின் பேரில் மருத்துவக் கல்வியின் தர‌த்தை உயர்த்தும் நோக்கத்தில் தான் நீட் தேர்வு நடத்தப்படுகிறது என சி.பி.எஸ்.இ தரப்பில் வாதம் முன்வைக்கபட்டது. இந்நிலையில் வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களாக 196 மதிப்பெண்கள் வழங்குமாறு சிபிஎஸ்இ-க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 2 வாரத்திற்குள் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.