தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் Pt web
தமிழ்நாடு

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்| 'கட்டாய மதமாற்றம் காரணமல்ல..' சிபிஐ அறிக்கை!

2022ஆம் ஆண்டில் கிறிஸ்துவ பள்ளி ஒன்றில் படித்து வந்த 12-ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில், ”மதமாற்றம் செய்ய வற்புறுத்தியது தற்கொலைக்கு காரணம் அல்ல” என உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

Premkumar S

தஞ்சாவூர் கிறிஸ்துவ பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி 2022ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். சிபிஐ விசாரணையில் மதமாற்றம் தொடர்பான ஆதாரங்கள் இல்லை எனவும், விடுதி காப்பாளர் சகாய மேரியின் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை செய்துகொண்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் இந்திய அளவில் பேசுபொருளாகி, தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு தஞ்சாவூர் மைக்கேல்பட்டியில் உள்ள கிறிஸ்துவ மேல்நிலைப் பள்ளி ஒன்றில், விடுதியில் தங்கி படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தில், அம்மாணவியை மதமாற்றம் செய்ய வேண்டும் என பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தியதன் பேரிலேயே தற்கொலை செய்து கொண்டார் என குற்றஞ்சாட்டி மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அப்போதைய, பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்பட பல்வேறு தரப்பினர் மதமாற்றம் செய்ய வேண்டும் என வற்புறுத்திய பள்ளியை மூட வேண்டும். பள்ளி ஆசிரியையை கைது செய்து செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம், அக்காலக்கட்டத்தில் தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் பேசுபொருளாகியிருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர்

தொடர்ந்து, தற்கொலை செய்து கொள்வதற்கு முன் பேசிய அம்மாணவியின் வீடியோ ஒன்று வெளியானது. அதில், விடுதி காப்பாளர் சகாய மேரி தனக்கு விடுதியின் கணக்குப் புத்தகங்களை பராமரிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும், தொடர்ந்து, தன்னை துன்புறுத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த நிலையில், விடுதி வார்டன் சகாய மேரியை காவல்துறை கைது செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து, மாணவி மதமாற்றம் செய்யப்பட்டாரா? என்றக் கோணத்தில் சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில் தான், இந்த வழக்கு தொடர்பான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்திருக்கிறது.

சிபிஐ அறிக்கையில், ” மாணவி தற்கொலைக்கு முன்னதாக வெளியிட்ட வீடியோவில், மதமாற்றம் தொடர்பாக எதுவும் பேசவில்லை. அதேபோல, அப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் மதமாற்ற முயற்சிகளில் ஈடுபட்டதற்கான எவ்வித ஆதரங்களும் இல்லை. முன்னாள் மாணவர்களின் சான்றிதழ்களை பரிசோதனை நடத்தியதில் யாரும் மதமாற்றம் செய்யப்படவில்லை என்பதும் நிரூபணமாகிறது. அதேசமயம், விடுதிக்காப்பாளர் சகாய மேரி விடுதிக் கணக்குப் புத்தகங்களை பராமரிக்கக் கோரி செய்த தொடர்ச்சியான துன்புறுத்தல்களால் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே, இவ்வழக்கில் சகாய மேரியே குற்றத்திற்கு பொறுப்பானவர்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் இந்திய அளவில் பேசுபொருளான கட்டாய மதமாற்றம் தொடர்பான இந்த விவகாரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.