மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி ப.சிதம்பரம் ஆகியோரின் வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.
இன்று காலை 7:45 மணி முதல் 10 சிபிஐ அதிகாரிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி, நொய்டா, காரைக்குடி ஆகிய இடங்களில் ப.சிதம்பரத்துக்கு சொந்தமான 14 இடங்களில் அதிரடியாக சோதனை நடைபெற்று வருகிறது. ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிபிஐ அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்திடம் தனியாக 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
வீட்டில் நடந்த விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த சிபிஐ சோதனை நடைபெறுகிறது என்றும், இந்த சோதனையில் எந்த ஒரு ஆவணத்தையும் சிபிஐ கைப்பற்றவில்லை என்றும் எங்கள் மீதான எந்தக் குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாது என்றும் தெரிவித்தார். தற்போது கார்த்தி சிதம்பரத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணையைத் தொடர்கிறது, சிபிஐ.