தமிழ்நாடு

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு: 2 ஆண்டுகளுக்குப்பின் தந்தையிடம் சிபிஐ விசாரணை

Sinekadhara

கிடப்பில் கிடந்த ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மாணவியின் தந்தையிடம் சிபிஐ விசாரணை நடத்தியிருக்கிறது.

கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ஆம் தேதி சென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை என குற்றம் சாட்டினார். பல்வேறு அரசியல் அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தியதன் அடிப்படையில், வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. வழக்கு மாற்றப்பட்ட பிறகும் மாணவி தற்கொலைக்கு காரணமானவர்களும், செல்போன் பதிவில் குறிப்பிட்டுள்ள பேராசிரியர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கு கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் இருந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 14-ம்தேதி மாற்றப்பட்டது. இதையடுத்து 3 ஐஐடி போராசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். நாடு முழுவதும் உள்ள ஐஐடிக்களில் மாணவர்களுக்கான பிரச்னை குறித்து அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இதன்பிறகு பாத்திமா வழக்கு 2019-ம் ஆண்டு டிசம்பர் 15-ம்தேதி சிபிஐக்கு மாற்றப்பட்டது. டிசம்பர் 27-ம் தேதி வழக்குப்பதிவு செய்த சிபிஐ, இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 174 குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் (இயற்கைக்கு மாறான மரணம்) என வழக்குப்பதிவு செய்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2019-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அதிகாரிகள் சந்தித்து தனது மகளின் மரணத்திற்கு நியாயம் கேட்டு முறையிட வந்தார். ஆனால் சிபிஐ அதிகாரிகள் சந்திக்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி தந்தை அப்துல் லத்தீப்பிற்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி இன்று காலை அவர் பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். காலை 10.30 மணியளவில் ஆஜாரான அப்துல் லத்தீப் விசாரணை அதிகாரியான சிபிஐ டிஎஸ்பி சந்தோஷ் குமார் விசாரணை நடத்தினார். லத்தீப் அளிக்கும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே மாணவி பாத்திமா லத்தீப்பின் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்கள் சி.பி.ஐ சைபர் ஆய்வகத்தில் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

விசாரணையில் மாணவி பாத்திமாவின் தற்கொலை சம்பவம் தொடர்பான பல்வேறு கேள்விகள் சி.பி.ஐ அதிகாரிகள் மூலம் பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீபிடம் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணை முடிந்தபிறகு அப்துல் லத்தீப் தரப்பு வழக்கறிஞர் முகமது ஷா செய்தியாளர்களிடம் கூறுகையில், "சி.பி.ஐ அதிகாரிகள் தரப்பில் சுமார் 2.30 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் எங்கள் தரப்பிலிருந்து முறையான பதில் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை துரிதப்படுத்த உயர்நீதிமன்றத்தை அணுகுவதோடு, தமிழக முதல்வரையும் நாளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்" என்றார்.

இதையடுத்து மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் செய்தியாளர்களிடம் கூறுகையில், "2 ஆண்டுகளுக்கு பின் விசாரணைக்கு அழைத்திருந்தாலும் விசாரணை நேர்மையான முறையில், சரியான பாதையில் நடைபெற்று வருவதாக நம்பிக்கை உள்ளது. அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும்தான் பதில் அளித்துள்ளோம். எனது மகளின் தற்கொலைக்கு சரியான நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. உண்மையான குற்றவாளியை கண்டுபிடிப்பார்கள் நம்பிக்கை உள்ளது. 2 ஆண்டுகளாக விசாரணை நடப்பதால் மன வேதனைக்கு ஆளாகியுள்ளேன். கேரள, தமிழ் ஊடகங்கள் முழு ஆதரவு தருகிறார்கள். விசாரணை நேர்மையான முறையில் நடக்கும் என நம்புகிறேன். சிபிஐ கேட்ட கேள்விகளுக்கு சரியான பதிலை அளித்துள்ளேன். அடுத்தக்கட்ட விசாரணையை சிபிஐ முடிவு செய்ய வேண்டும். சொல்லமுடியாத வேதனையில் இருக்கிறேன். இதுவரை குற்றவாளிகளை கைது செய்யாதது வேதனை அளித்துள்ளது. என்னுடனே ஊடகங்கள் பயணிப்பதால் எப்போதும் ஆதரவு தாருங்கள். நன்றி" என்று தந்தை லத்தீப் கூறினார். இதையடுத்து இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்குள்ளான ஐஐடி பேராசிரியர்களிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.