தமிழ்நாடு

டேராடூன் விரைந்தது சிபிசிஐடி-சிவசங்கர் பாபாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கவும் முடிவு

webteam

சிவசங்கர் பாபா மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் விசாரிக்க சிபிசிஐடி தனிப்படை டேராடூன் விரைந்தது.

சமூக வலைதளங்களிலும் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். அதனை மையமாக வைத்து குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தியது. இதன்படி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் தொடர்பாக சிவசங்கர் பாபா உட்பட சிலர்மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம், தொழில்நுட்ப தகவல் சட்டம் உட்பட 8 பிரிவுகளின்கீழ் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம்செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். சிவசங்கர் பாபா டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதால் வேறொரு மாநிலத்திற்கு சென்று விசாரணை நடத்த ஏதுவாக சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சிவசங்கர் பாபாவை விசாரிக்க சிபிசிஐடி தனிப்படை டேராடூன் விரைந்துள்ளது. மேலும், சிவசங்கர் பாபா வேறு நாட்டிற்கு தப்பிச்செல்ல வாய்ப்பு இருப்பதால் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கவும் சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.